மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 50-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பேருந்தை தூக்கி, விபத்தில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்களை உயிருடன் மீட்டு, இந்தியர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய 2 பேரை மீட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
புனேயில் வேகமாக சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிய பின்னர் போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் மோட்டார் பைக்கில் பயணம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் பேருந்துக்குக் கீழ் சிக்கினர்.
இதைக் கண்டதும் அவ்வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து பேருந்தை ஒரு பக்கமாக தூக்கி அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ரயில்வே பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் நடுவே ஒருவரது கால் சிக்கிக் கொண்டது. பின்னர் அந்த ரயிலையே ஆயிரக்கணக்கானோர் சாய்த்து அந்த நபரை உயிருடன் மீட்டனர்.
ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அதிசய சம்பவம், “மக்கள் சக்தி” என்று பிரகடனப்படுத்தப்பட்டது. வேறு எங்கும் இப்படி செய்வார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால் புனேயில் மக்கள் இதனை தற்போது செய்து காட்டியுள்ளனர்.