கேரளாவில், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகளில் சிக்கியுள்ள கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்கம்சேரிக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் விதித்து தலச்சேரி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருச்சூரைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ராபின் வடக்கம்சேரி, கண்ணூர் மாவட்டம் கோட்டியூர் தேவாலயத்தில் பாதிரியாராக இவர் பணியாற்றியபோது அங்கு 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அச்சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து அதை மறைக்க ஒரு காப்பகத்தில் அப்பெண்ணை சேர்க்கமுயன்றபோது இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. பாதிரியார் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் அவர் வெளிநாடு தப்பிச்செல்லவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இவ்வழக்கு தொடர்பாக ராபின் வடக்கம்சேரிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் குழந்தைகள் நல அமைப்புத் தலைவர்ஒருவரும் இன்னொரு பாதிரியார் தாமஸ் ஜோசப் என்பவரும் 2 கன்னியாஸ்திரிகளும் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர். பின்னர் இவர்கள் கடந்த மார்ச் 2017ல் சரணடைந்தனர்.
இந்நிலையில் சரணடைந்தவர்களின் வாக்குமூலங்களும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலங்களும் பெறப்பட்டன. குற்றச்சாட்டு உறுதியான நிலையில் கண்ணூர் மாவட்டத்தின் தலசேரி நீதிமன்றம் இன்று தீர்ப்ப்பு வழங்கியது. நீதிபதி நீதிபதி பி.என்.வினோத் அளித்த தீர்ப்பில், " 2016ல் மணந்தவாடி (மறைமாவட்ட) சர்ச் பாதிரியார் 11ஆம் வகுப்பு படித்துவந்த ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாலியல் குற்றங்கள் சட்டம் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் அவரது குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் செய்த குற்றத்திற்கு தண்டனையாக ரூ.3 லட்சம் அபராதமும் 60 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது " என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
கேரளாவில் பாதிரியார்களால் பெண்களும், சிறுமிகளும் பாலில் பலாத்காரத்திற்கு உட்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.