இந்தியா

குஜ்ஜார் சமூகத்துக்கு 5% இடஒதுக்கீடு: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தி வரும்நிலையில் இடஒதுக்கீடு மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தினர். கடுமையான போராட்டத்தால் அப்போது ஆட்சியில் இருந்த பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில வாக்குறுதி அளித்தது. 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இடஒதுக்கீட்டுக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இடஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, மீண்டும் ரயில்  மறியல் போராட்டம் நடத்தினர்.

ஏராளமானோர் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ராஜஸ்தானில் பல்வேறு பகுதிகளிலும் ரயில் போக்குவரத்து முடங்கியது.

இதையடுத்து குஜ்ஜார் சமூகத்துக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை அம்மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. குஜ்ஜார் மட்டுமின்றி பஞ்சாராஸ் உள்ளிட்ட சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க இந்த புதிய மசோதா வழி வகை செய்கிறது.

இதன் மூலம் ராஜஸ்தானில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு 21 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குஜ்ஜார் மக்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட வேண்டும் என ராஜஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. 

SCROLL FOR NEXT