இந்தியா

‘‘பாகிஸ்தானுக்குள் புகுந்து பின் லாடனை கொன்ற அமெரிக்கா; இந்தியாவாலும் செய்ய முடியும்’’- அருண் ஜேட்லி ஆவேசம்

செய்திப்பிரிவு

கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்கா ஒசாமா பின் லாடனை கொன்றது போல இந்தியாவும் செய்ய முடியும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ஆவேசத்துடன் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.

இதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் ஒரு விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

எல்லையில் பதற்றம் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் புகுந்து அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லாடனை அமெரிக்க படைகள் தாக்கிக் கொன்றன. இதுபோன்று நடைபெறுமா? என சில கேட்கின்றனர். இதுபோல இந்திய ராணுவத்தாலும் செய்ய முடியும்’’ என அருண் ஜேட்லி கூறினார்.

SCROLL FOR NEXT