இந்தியா

வாக்களிக்க இன்று லஞ்சம் கொடுக்கும் நாள்: விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை விமர்சித்த ப.சிதம்பரம்

பிடிஐ

 விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் முதல்கட்டமாக நாட்டில் உள்ள 2 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நிலையில், 'வாக்களிக்க லஞ்சம் கொடுக்கும் நாள் இன்று' என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்காக ‘பிரதம மந்திரி விவசாய நலநிதி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த உதவித் தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் வருகிற மார்ச் 31-ம் தேதி வரை கணக்கிட்டு முதல் தவணை யாக ரூ.2,000 நிதியுதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தின் கோரக் பூரில் இன்று தொடங்கி வைக்கிறார். அப்போது சுமார் ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2,000 நேரடி யாக டெபாசிட் செய்யப்படும். அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், " இன்று வாக்குக்கு பணம் கொடுக்கும் நாள். விவசாயிகளின் குடும்பத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காக அதிகாரப்பூர்வமாகவே பாஜக அரசு ரூ.2 ஆயிரம் லஞ்சமாக இன்று வழங்குகிறது. இன்று  ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

மோடி அரசு 5 ஆண்டுகள் விவசாயத்தை சீரழித்துவிட்டு இன்று ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் தரப்போகிறார்கள்.  இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன. 5 பேர் கொண்ட விவசாயக் குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17. இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா

ஜனநாயகத்தில்  வாக்குக்கு லஞ்சம் அளிப்பதைக் காட்டிலும் மிகப்பெரிய வெட்கக் கேடு ஏதுமில்லை. இதில் மிகப்பெரிய அவமானம் என்னவென்றால், வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதைத்  தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், தடுக்கமுடியாமல் இருப்பதுதான் " எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT