எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது.
தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மார்ச் 10-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், வழக்குகளில் தண்டனை பெற்றால் பதவி இழக்கக்கூடும் என்று கருதப்படும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான விசாரணையை, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதிலிருந்து ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மீதான வழக்கு விசாரணையை ஓராண்டுக்குள் நிறைவு செய்யும் வழிவகைகளை ஆராயுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சட்டத்துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூலை 24-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமியும் தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை தாமதமாக நடைபெற்று வருவதாக தெரிய வந்தால் வழக்கை விரைவாக நடத்தி முடிக்கும் வகையில் விசாரணையை தினந்தோறும் நடத்துமாறு மாஜிஸ்திரேட் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் முறையிட வேண்டும்.
இந்த வழக்குகளில் ஆஜராவதற்கு தேவையான எண்ணிக்கையில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். சாட்சிகள், ஆவணங்கள், மருத்துவ மற்றும் தடய அறிவியல் அறிக்கைகளை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணையை கண்காணிக்க மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியின் தலைமையில் மாவட்ட அளவிலான குழுவை அமைக்க வேண்டும்.
இக்குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும், செயலாளராக அரசு வழக்கறிஞரும் இருக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை தொடர்பான நிலவரங்களை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உள்துறை செயலாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற கடிதத்தை மாநில அரசுகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் அனுப்பியுள்ளார்.