இந்தியா

பாதுகாப்புப் படை அதிரடி: காஷ்மீரில் என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

பிடிஐ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகரில் உள்ள ஷோபியான் மாவட்டம், மீமந்தர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை முதல் மீமந்தர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும், அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு தகுந்த பதிலடி அளித்த பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர்.  இதில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் லேசாகக் காயமடைந்தனர். இதில் இரு வீரர்கள் மட்டும் ராணுவ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிபொருட்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் உரி எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாலகோட் பகுதியில் நேற்று இந்திய விமானப்படை, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் ராணுவப் படைகள் தனது அத்துமீறலை அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த தாக்குதலில் இதுவரை எந்த ராணுவ வீரரும் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் எல்லை மீறித்தாக்குதல் நடத்தும் அதேவேளையில், அதற்குத் தகுந்த  பதிலடியையும் இந்திய ராணுவத்தினர் அளித்து வருகின்றனர்.  

SCROLL FOR NEXT