டிக் டாக் செயலி மூலம் மீண்டும் குடும்பத்துடன் இணைந்திருக்கிறார் 20 வயது இளம்பெண் ஒருவர்.
சமீபகாலமாக டிக் டாக் ஏற்படுத்தும் மோசமான விளைவுகள் குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், இந்தச் செய்தி சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன் உறவுகளை விட்டுவிட்டு வீட்டிலிருந்த வெளியேறிய பெண் தனது குடும்பத்தாரின் டிக் டாக் வீடியோவைப் பார்த்து மீண்டும் குடும்பத்தினரைச் சந்தித்த சம்பவம் பற்றிய செய்தி இது.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
''கடந்த 2016 நவம்பர் 5-ம் தேதி 17 வயதான பெண் ஒருவர் அவரது வீட்டிலிருந்து காணாமல் போனார். குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரைப் பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் 2018-ல் இந்த வழக்கு ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்னதாக காணாமல் போன பெண்ணின் அக்காவும் மாமாவும் போஜ்புரி பாடல் ஒன்றுக்கு வாயசைத்து அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அபய் ஷெட்டி என்ற நபரிடம் இருந்து ஃபேஸ்புக் நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு ஒரு அழைப்பு வந்துள்ளது. காணாமல் போன பெண் தான் அந்தப் பெயரில் அவரது அக்காள் கணவருக்கு ஃபேஸ்புக் நட்பில் இணைய கோரிக்கை விடுத்திருக்கிறார். பின்னர் தொடர்ந்து சேட் செய்துள்ளார். தனது பெயர் அபய் ஷெட்டி என்று கூறியதுடன் தனது அக்கா பற்றி விசாரித்துள்ளார். மேலும் வீட்டிலுள்ள அனைவரது தகவல்களையும் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.
ஃபேஸ்புக்கில் சாதுர்யமாகப் பேசி, அப்பெண்ணின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி வீடியோ கால் செய்ய வைத்துள்ளார். வீடியோ காலில் அபய் ஷெட்டி என்ற பெயரில் பேசிய பெண் தனது மனைவியின் சகோதரிதான் என்பது உறுதியானதும் தானேவின் சராய் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அந்தப் பெண்ணும் அங்கு வர போலீஸார் அவரைச் சுற்றி வளைத்தனர். பின்னர் விசாரணையில் அந்தப் பெண் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே வீட்டை விட்டு வெளியேறிதாகத் தெரிவித்துள்ளார்''.
இவ்வாறு போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மீண்டு வந்த பெண்
"எனது அம்மா ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தார். 9-ம் வகுப்பு படிக்கும்வரை நான் எனது அம்மாவுடன் தான் இருந்தேன். ஆனால், எனக்கு மும்பையில் இருக்கும் அக்காள் வீட்டில் இருக்கவே விருப்பமாக இருந்தது. அதனால் அங்கு சென்றேன். அம்மாவோ மீண்டும் அவரிடமே வருமாறு வற்புறுத்தினார். அதனால் வீட்டை விட்டு வெளியேறினேன். பைக்குல்லா ரயில்வே நிலையத்துக்கு வந்தடைந்தேன். ஒரு பெண்ணின் உதவியுடன் சூரத்தில் ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்குதான் என்னவரைப் பார்த்தேன். எனக்கு 18 வயதானதும் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
ஜூன் 22,2017-ல் எங்கள் திருமணம் நடந்தது. எனது கணவர் கோரேகானில் உள்ள சினிமாவில் நடனக் கலைஞராக உள்ளார். டிக்டாக்கில், வெளியான வீடியோவில் எனது குடும்பத்தாரைப் பார்த்ததும் அவர்களுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஏக்கம் வந்தது" என அந்தப் பெண் தெரிவித்தார்.
இந்த வழக்கை முடித்துவைத்ததாக அறிவிக்கக் கோரி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.