பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது எல்லை கடந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம், ''இந்தியாவின் போர் விமானங்கள் எல்லை கடந்து பாகிஸ்தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்தியாவின் 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டைதீவிரவாதிகள் முகாம் மீது வீசி முற்றிலுமாக அழித்தன. இதில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து இந்தியப் பாதுகாப்புத் துறை, ''பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானங்கள் எல்லை மீறித் தாக்குதல் நடத்தியது குறித்த தகவல் ஏதும் எங்களிடம் இல்லை'' என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், ''முஸாஃபராபாத் துறைமுகத்தில் இந்திய விமானங்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்தின.
பாலாகோட் பகுதியில் பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து அவை தப்பித்துச் சென்றன. பாகிஸ்தானின் விமானப் படை இந்தியாவுக்கு உடனடியாக பதிலடி தாக்குதல் அளித்தது. இதில் பாகிஸ்தானுக்கு உயிரிழப்பும், சேதங்களும் இல்லை'' என்று கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய விமானப் படையின் பைலட்களுக்கு எனது வணக்கங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
இந்தத் தாக்குதல் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடை யே மோதல் சூழல் உருவாகிய நிலையில் இந்தத் தாக்குதல் இந்திய ராணுவம் தரப்பில் நடத்தப்பட்டுள்ளது.