இந்தியா

பாலாகோட் தாக்குதலால் மோடி அலை அபாரம்; பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: எடியூரப்பா கருத்தால் சர்ச்சை

பிடிஐ

பாலாகோட் தாக்குதலால் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-ல் பாஜகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கர்நாடகா பாஜக தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 27-ம் தேதி இந்திய விமானப்படை பாலாகோட் தீவிரவாத முகாமில் தாக்குதல் நடத்தியது. இதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்கு தேசம் முழுவதும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. 40 வீரர்களை இழந்ததற்கு தகுந்த பதிலடி என்று பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாலாகோட் தாக்குதலை தேர்தல் லாபத்துடன் ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் எடியூரப்பா.

இது தொடர்பாக அவர், "ஒவ்வொரு நாளும் பாஜகவுக்கு ஆதரவான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. காற்று பாஜகவின் பக்கம் வீசுகிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தீவிரவாதிகள் பதுங்கிடங்களை அழித்துள்ளது நாட்டில் மோடி ஆதரவு அலையை உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தெரியும்.

இதனால், மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 22-ல் பாஜகவுக்கு வெற்றி கிட்டும்" என அவர் கூறியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பலம் 16:

கர்நாடகாவில் தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு 16 எம்.பி.க்கள், காங்கிரஸுக்கு 10, மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 2 எம்.பி.க்கள் உள்ளனர்.

இந்த நிலையில், பாலாகோட் தாக்குதலால் பாஜகவுக்கு கர்நாடகாவில் 22 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என எடியூரப்பா கூறியிருக்கிறார்.

ராணுவ தாக்குதல்களை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் சூழலில் அதை நிரூபிப்பதுபோல் எடியூரப்பா பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT