இந்தியா

போராட்டம் வாபஸ்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் குஜ்ஜார் மக்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியது

செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலத்தில் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியதால் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த குஜ்ஜார் இன மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜ்ஜார் சமூகத் தலைவர் கிரோரி சிங் பாய்ன்ஸ்லா கூறுகையில், ''எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. அதனால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம். அமைச்சர் விஸ்வேந்திர சிங், குஜ்ஜார் சமுதாயத்தின் கோரிக்கையை உள்ளடக்கிய மாநில அரசின் வரைவை எங்களோடு பகிர்ந்துகொண்டார்'' என்று தெரிவித்தார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அரசு வேலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் குஜ்ஜார் சமூக மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டில் பலன் கிடைக்கும்.

குஜ்ஜார் சமூக மக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறுகையில், "குஜ்ஜார் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் ராஜஸ்தான் அரசை நான் பாராட்ட விரும்புகிறேன். குஜ்ஜார் சமூகம் நீண்ட காலம் காத்திருந்தது. இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம்'' என்றார்.

ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் கிரோரி சிங் பாய்ன்ஸ்லா தலைமையில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்கள் கோரிக்கை மீது அரசின் கவனத்தைத் திருப்புவதற்காக சாலைகளிலும், ரயில் தண்டவாளங்களிலும் இவர்கள் நடத்திய போராட்டத்தினால் போக்குவரத்து முற்றிலுமாக சீர்குலைந்திருந்தது.

பல ஆண்டுகளாக குஜ்ஜார் இன மக்கள் தங்கள் இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்துப் போராடிய போதிலும் கடந்த 2015லிருந்து அவர்களது போராட்டம் வலுவடைந்தது. அதிலும் கடந்த 10 நாட்களாக இடைவிடாத போராட்டத்திற்கு ராஜஸ்தான் அரசு செவிமடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT