இந்தியா

புல்வாமா தாக்குதலுக்கு ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் பழிக்கலாமா?- நவ்ஜோத் சிங் சித்து கேள்வி

பிடிஐ

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 45 பேர் கொல்லப்பட்டதற்கு ஒரு சிலர்தான்  காரணம், அதற்காக பாகிஸ்தான் முழுவதையும் பழிசொல்வது நியாயமா? என்று பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சையாகத் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று மாலை துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி பேருந்து மீது காரை மோதி வெடிக்கச் செய்து தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் புல்வாமா தாக்குதல் குறித்து இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " புல்வாமாவில நமது ராணுவத்தினர் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது, அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாத குழு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆனால், குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையும், மக்களையும் நாம் பழிசுமத்தலாமா? என்று சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் சிறந்த நட்பு கொண்டவர். இம்ரான் கான் பிரதமராக பொறுப்புஏற்கும் நிகழ்ச்சிக்குச் சென்று, அந்நாட்டின் ராணுவத் தளபதியை கட்டியணைத்து சித்து நட்புறவு பாராட்டியது பெரும் சர்ச்சைக்குரியதானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT