இந்தியா

புல்வாமா தாக்குதல்: பெற்றோருக்காக விருப்ப ஓய்வு பெற விரும்பிய வீரர் உயிரிழந்த துயரம்; தீராத சோகத்தில் குடும்பம்

செய்திப்பிரிவு

வயதான பெற்றோருக்காக விருப்ப ஓய்வு பெற இருந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த வீரர் ஒருவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.

 இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த குரு என்ற வீரரும் உயிரிழந்துள்ளார். 33 வயதான அவரது சொந்த ஊர் மடூர். அங்கு அவரது பெற்றோர், மனைவி, உறவினர்கள் வசித்து வருகின்றனர். குருவின் பெற்றோர்கள் வயதானவர்கள். மிகவும் எளிய குடும்பம்.

அவரது சகோதரர்கள் உள்ளூரில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். பெற்றோருக்கு வயதாகி விட்டதால் அவர்களை கவனிப்பதற்காக சொந்த ஊருக்கு திரும்பி விடாலம் என்ற திட்டத்தில் குரு இருந்தார். 10 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊர் வந்திருந்த அவர் அப்போது தனது பெற்றோரிடம் பேசியுள்ளார்.

விரைவில் விருப்ப ஓய்வு பெற்ற ஊர் திரும்புவதாகவும், அவர்களை பார்த்துக் கொள்வதாகவும் பெற்றோரிடம் உறுதி அளித்துள்ளார். இந்தநிலையில் விடுமுறையை முடித்துக் கொண்டு ஜம்மு முகாமுக்கு சென்ற அவர், மற்ற வீரர்களுடன் ஸ்ரீநகர் முகாமுக்கு செல்லும் வழியில் புல்வாமாவில் தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தியை கேட்டு உறவினர்கள் மட்டுமின்றி அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. பெற்றோர்கள் இருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருப்ப ஓய்வு பெற்று மகன் தங்களை கவனித்துக் கொள்வான் என காத்திருந்த பெற்றார் தற்போது மீளாத சோகத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குருவின் மனைவி கலாவதிக்கு அரசு வேலை வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT