இந்தியா

சிபிஐ இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க மறுத்து 3-வது நீதிபதியும் விலகல்

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.வி. ரமணா இன்று திடீரென அறிவித்தார்.

சிபிஐ இடைக்கால இயக்குநர் வழக்கை விசாரிக்காமல் மறுத்து விலகிக்கொள்ளும் மூன்றாவது நீதிபதி ரமணா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் விலகிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.

மேலும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது.

அதையடுத்து அலோக் வர்மாவைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை கடந்த 21 ஆம் தேதி நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை விசாரிக்கும் குழுவில் இருந்து தான் விலகுவதாகத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார்.

தலைமை நீதிபதி மறுப்பு

சிபிஐ இயக்குநரைத் தேர்வு செய்யும், பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழுவில் தானும் இடம் பெற்று இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க இயலாது. இந்த மனு வரும் 24-ம் தேதி மூத்த நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சிக்ரி விலகல்

இந்நிலையில், இந்த மனு மூத்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன் கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவைத் தான் விசாரிப்பதில் இருந்து விலகுகிறேன் என்று நீதிபதி சிக்ரி அறிவித்தார்.

இதற்கிடையே சிபிஐ இயக்குர் அலோக் வர்மாவை நீக்கிய நரேந்திர மோடி தலைமையிலான உயர் மட்டக் குழுவில் நீதிபதி ஏ.கே. சிக்ரியும் இடம் பெற்றிருந்தார், மேலும், இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவை நியமித்த குழுவிலும் சிக்ரி இருந்தார். ஆதலால்தான் தான் இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என்று சிக்ரி விலகியுள்ளார்.

ரமணாவின் காரணம்

இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி என்.வி. ரமணாவும் மனுவை விசாரிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், " நாகேஸ்வர ராவ் தன்னுடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தொடர்பான வழக்கைத் தான் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது. மேலும், அவருடைய மகளின் திருமணத்திலும் நான் பங்கேற்றேன்  என்பதால், தன்னால் வழக்கை விசாரிக்க இயலாது. ஆதலால், விலகுகிறேன். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைக்கிறேன். அவர்கள் எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை இறுதி செய்வார்கள் " எனத் தெரிவித்தார்.  

SCROLL FOR NEXT