முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் மகன் தொடர்ந்த அவதூறு வழக்கில், டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட நான்கு பேர் மீது டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. வழக்கின் சாட்சிகள் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷண், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஷாஜியா இல்மி ஆகியோர் கடந்த ஆண்டு டெல்லியில் பத்திரிகை யாளர்களுக்கு பேட்டி கொடுத்தனர்.
அப்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக கபில் சிபல் இருந்தார். அவரது மகன் அமித் சிபல் அப்போது வோடஃபோன் நிறுவனத்துக்கு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடி னார். இதன்மூலம் ஆதாயம் பெறப்பட்டுள்ளது என்று அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இத்தகைய கருத்தை தெரிவித் ததன் மூலம் தனக்கு அவதூறு ஏற்படுத்தி விட்டதாகக் கூறி, அமித் சிபல் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் கேஜ்ரிவால் உள்ளிட்ட நான்கு பேர் மீதும் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். டெல்லி மெட்ரோ பாலிடன் மாஜிஸ்திரேட் சுனில் குமார் சர்மா நேற்று குற்றச் சாட்டுகளை விசாரணைக்கு ஏற்று பதிவு செய்தார்.
இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி முதல் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை தொடங்கும் என்று நீதிபதி அறிவித்தார். அதற்கு முன்பாக வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.