தெருநாய்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை அனுபம் திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் காட்டுப் பன்றிகளை கொடூரமாக கொல்கின்றனர். விதிகளை மீறி இதுபோன்ற செயல்கள் அங்கு நடைபெறுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த போதுமான நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று வந்தது.
அப்போது ஆஜரான அனுபம் திரிபாதி கூறும்போது, “காட்டுப் பன்றிகள் கொல்லப்படுவதைத் தடுக்க தற்போது தமிழ்நாடு அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது திருப்தியளிக்கிறது. கடந்த ஓராண்டில் காட்டுப் பன்றிகள் கொல்லப்படவில்லை. எனவே இந்த வழக்கில் இனி நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை” என்றார்.
இதையடுத்து அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அதே நேரத்தில் அப்போது புதிய மனு ஒன்றை திரிபாதி தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் தெருநாய்களின் தொல்லை எல்லை மீறி உள்ளது. தெருவில் போவோர் வருவோர் தெருநாய்களால் கடிபடுகின்றனர். இதனால் அவர்கள் அச்சத்துடன் தெருவில் நடந்து செல்லவேண்டியுள்ளது. தெருநாய்களின் தொல்லையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இதையடுத்து மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ‘‘தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன. தெருநாய்களால் ஏராளமான பொதுமக்கள் கடிபட்டு அவதிப்படுகின்றனர். அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் அதுதொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். - பிடிஐ