ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது, தேர்தலில் போட்டியிடும் வயது 21 ஆக குறைப்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை.
மக்களவைத் தேர்தல் அறிக்கையை, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டார். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே முக்கிய வாக்குறுதி என்று அவர் குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* ஜன்லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்து ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்.
* மக்களுக்கு நேரடி நன்மைகள் விளையும் வகையில் அதிகாரப் பகிர்வு மற்றும் தன்னாட்சி முறைக்கு முக்கியத்துவம் தரப்படும்.
* சாதாரண மக்களுக்கும் எளிதில் நீதி கிடைக்க வழிவகுக்கப்படும்.
* காவல் நிலையங்களில் உள்ள விசாரணை அறைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தேர்தலில் போட்டியிடும் வயதை 25-ல் இருந்து 21 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார வசதிக்கு வழிவகுக்கப்படும்.
* அனைவருக்கும் கல்விக்கு முக்கியத்துவம்.
* கருப்புப் பணத்தை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் கையாளப்படும்.
* சாதி ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவருவோம்.
* ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
* பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்.
* டெல்லி காவல் துறையை டெல்லி அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
* உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில், வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்.