வணிக வளாகம் கட்ட தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் 'மூளையற்றவர்' என விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரள மாநிலம் தேரிகுளம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன். இவர் இடுக்கி மாவட்ட துணை ஆட்சியர் ரேணுகா ராஜை தரக்குறைவாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். துணை ஆட்சியரை அவர் திட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
வீடியோவில் ராஜேந்திரன் பேசியதாவது:
"அரசாங்கமே அரசு அதிகாரியிடம் தடையில்லாச் சான்றிதழ் கோர வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இங்கு கட்டப்படும் கட்டிங்களுக்கான விதிமுறைகள் பஞ்சாயத்துக்கு உட்பட்டது. துணை ஆட்சியர் சொல்வதுபோல் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. அவருக்கு மூளையில்லை.
அவர் கலெக்டராகவே படித்தார். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் மூளை இப்படி அதீதமாக வேலை செய்யும். அவர் இன்னும் படிக்க வேண்டும். இங்குள்ள கட்டிட வரைமுறை விதிகள், திட்டங்கள் பற்றி படிக்க வேண்டும்.
பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டிட விவகாரங்களில் அவர் தலையிட முடியாது. இது ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது குரல் கேட்கப்பட வேண்டும்".
இவ்வாறு எம்.எல்.ஏ. ராஜேந்திரன் விமர்சித்துப் பேசுவது அந்த வீடியோவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்திருந்தாலும் இணையத்தில் வைரலாகி தற்போது ஊடக கவனத்துக்கு வந்திருக்கிறது.
இந்நிலையில் அதிகாரிக்கு ஆதரவாக வருவாய்த்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் கருத்து தெரிவித்துள்ளார். "துணை ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டதே . சட்ட விதிகளுக்கு ஏற்ப அவர் நடவடிக்கை எடுக்கும்போது நாம் துணை நிற்க வேண்டும்" என்றார்.
கேரள உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, மூணார் பகுதியில் உள்ள 7 கிராமங்களில் புதிதாகக் கட்டிடம் எழுப்ப வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த விதிமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் பெறப்படாதாலேயே கடந்த பிப்.6-ம் தேதி துணை ஆட்சியர் ரேணுகா ராஜ் மெமோ கொடுத்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.