இந்தியா

தேர்தல் நேரத்தில் சமூக ஊடகங்களில் வெறுப்பு பேச்சைத் தடுக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

மக்களவைத் தேர்தல் நேரத்தில், சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பரப்புதல், பேசுதல் ஆகியவற்றைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கொல்கத்தாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மக்களவைத் தேர்தல் வரும் நேரத்தில் சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவதையும், கருத்துகளைப் பதிவிடுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக சமூக ஊடகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு இவற்றைக் கண்காணித்து, சமூக வலைதளங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி எங்களிடம் அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கை குறித்து நாங்கள் விவாதித்து, சில திருத்தங்களை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 126-ல் செய்ய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்குப் பரிந்துரைப்போம். விரைவில் நடவடிக்கைகள் இருக்கும்" என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலோடு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அரோரா பதில் அளிக்கையில், "ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருடன் அடுத்த வாரம் கலந்தாய்வு நடத்த இருக்கிறேன்.

அப்போது மாநிலத்தின் நிலவரம் குறித்து கேட்டு அறிந்த பின் முடிவு செய்யப்படும். ஆதலால், இப்போதுள்ள நிலையில் எந்தப் பதிலும் இதில் அளிக்க இயலாது. அதேபோல மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்துவதை இப்போதே கூற இயலாது''.

இவ்வாறு அரோரா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT