புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பேச்சுவார்ததை நடத்தும் நிலை முடிந்து விட்டது, இனிமேல் அதிரடியாக செயல்பட வேண்டிய தருணம் வந்துள்ளது, இதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்.
இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது, தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் கடும் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மோடி தெரிவத்து இருந்தார்.
இந்தநிலையில், இந்தியா வந்துள்ள அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மக்ரியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் தயங்க கூடாது. இதுதொடர்பாக ஜி20 நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதனை செயல்படுத்த வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவும், அர்ஜெண்டினாவும் கூட்டாக இன்று அறிவிக்கை வெளியிட்டுள்ளன.
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. பேச்சுவார்த்தை நடத்தும் நிலைமை இனி இல்லை. இனி செயல்பட வேண்டிய தருணம் வந்துள்ளது. உலக நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.