புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும் என மகாராஷ்டிராவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சூளுரைத்தார்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகையில் ‘‘காஷ்மீரில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் மிக மோசமான செயலைச் செய்து விட்டார்கள். நாடு முழுவதுமே கடும் சோகத்தால் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.வீரர்களின் தியாகம் வீண் போகாது. ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தலைவிதி இனிமேல் ராணுவத்தால் தீர்மானிக்கப்படும்’’ எனக் கூறினார்.
இதைத்தொடர்ந்து யலேயில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘இது புதிய மரபையும், கொள்கைகளையும் கொண்ட புதிய நாடு. இதனை உலக நாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. இது மிகவும் துயரமான நேரம். நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அறிவார்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்க்கப்படும். உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இந்த உறுதியை நான் அளிக்கிறேன்’’ எனக் கூறினார்.