இந்தியா

குஜராத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட புலி: வனத்துறை உறுதி செய்தது

செய்திப்பிரிவு

குஜராத் மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக புலி வசிப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குஜராத் மாநில வனப்பகுதியில் சிங்கங்கள் வசித்து வருகின்றன. இவை மேற்கு தொடர்ச்சி மலையை போன்ற அடர்ந்த, பசுமையான வனப்பகுதி அல்ல. வறண்ட இந்த வனப்பகுதியில் பொதுவாக சிங்கங்களே வசிக்கின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு பசுமையான பகுதியில் ஓரிரு புலிகள் இருந்ததாக வனத்துறை தெரிவிக்கிறது. அதன் பிறகு இங்கு புலிகள் தென்படவில்லை. புலிகள் வாழும் அளவுக்கு குஜராத் வனப்பகுதி இருக்கவில்லை.

இந்தநிலையில், ராஜஸ்தான் எல்லையில் உள்ள குஜராத்தின் மாஹிசாகர் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை குஜராத் அரசு மறுத்து வந்தது. எனினும்., அம்மாநில வனத்துறை சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தது.

இதில் அப்பகுதியில் 8 வயதுடைய புலி ஒன்று நடமாடுவது  கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த புலி மத்திய பிரதேசம் அல்லது ராஜஸ்தானில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும் வசிக்கும் அளவுக்கு சூழல் மாறி இருந்தால் மட்டுமே புலிகள் இங்கு வந்திருக்க முடியும். தேசிய விலங்கான புலி வசிக்கும் அளவுக்கு குஜராத் வனப்பகுதி மாறி வருவது அங்குள்ள வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

SCROLL FOR NEXT