புகழ்பெற்ற பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்கு நேரலையில் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடத்துவதற்காக 'ஐ ஆம் கிங் - தி மைக்கேல் ஜாக்சன்' குழுவினர் விரைவில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.
'ஐ ஆம் கிங் - தி மைக்கேல் ஜாக்சன்' இசைக்குழுவினர் உலகம் முழுவதும் இசை நடன ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள். வரும் மார்ச் மாதம் இந்தியா வர உள்ள இந்த இசைக்குழு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கிட்டத்தட்ட 7 நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சிகள் மைக்கேல் ஜாக்சனுக்கு ஓர் இசையஞ்சலியாக அமையும் என்று கூறப்படுகிறது.
மார்ச் 13 முதல் மார்ச் 17 வரை மும்பையில் உள்ள தேசிய நிகழ்த்துக்கலை மையம் மற்றும் பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரியம் ஆகியவற்றில் ஏழு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைக் காண்பதற்கான, கட்டண நுழைவுச் சீட்டுகளை எல்ஏடி நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனத்துடன் கைகோத்துள்ள புக்மை ஷோ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஜாக்சன் நினைவாஞ்சலிக் கலைஞர்கள் அவரது பிரபல ஹிட் பாடல்களுக்கு நடனமாடுவார்கள். இந்நடனங்கள் யாவும் லாஸ் வெகாஸிலும் உலகெங்கிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஐபி மற்றும் புக் மை ஷோ நிறுவனங்களின் நேரலை நிகழ்வுகள் தலைமை நிர்வாகி குணால் காம்பாடி இதுகுறித்து தெரிவிக்கையில், ''மைக்கேல் ஜாக்சன்ஒரு புகழ்பெற்ற பாப் கலைஞர் மட்டுமல்ல. நடனப் புயலாக வந்து உலகையே புரட்டிய ஓர் அதிசயம்.
அவரது இசை மற்றும் நடனப் பாணிகளை இந்தியாவின் ஒவ்வொரு முனையிலும் உள்ள வீடுகளைச் சென்றடைந்துள்ளன. ஜாக்சனுக்கான இசை அஞ்சலி நிகழ்ச்சியை இந்தியாவுக்கு கொண்டு வந்துசேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.