இந்தியா

திருப்பதியில் ரூ. 8 கோடிக்கு தலைமுடி ஏலம்

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலத்தின் மூலம் நேற்று தேவஸ்தானத்திற்கு ரூ. 7.94 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது ஐதீகம். தினமும் சுமார் 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த தலைமுடி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு, அவை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. இதன்படி நேற்று 4,300 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 7.94 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஆழ்வார் திருமஞ்சனம்

இதனிடையே, திருப்பதி அடுத்துள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர் கோயிலில் வரும் 24-ம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, நேற்று ஆகம விதிகளின்படி கோயிலை வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனால் காலை 11.30-க்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT