இந்தியா

சிவசங்கரனுக்கு தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்தார்: நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

செய்திப்பிரிவு

2006ஆம் ஆண்டு, ஏர்செல் மற்றும் மலேசிய நிறுவனமான மேக்சிஸ் குழுமப் பங்குகளை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் விற்க வேண்டும் என்று அப்போதைய தொலைத் தொடர்பு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக, சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

"குற்றம் சாட்டப்பட்ட முதலாம் நபர் (தயாநிதி மாறன்), சிவசங்கரன் என்பவர் தனது நிறுவனங்களை விற்க நெருக்கடி கொடுத்துள்ளார். இவர் தனது மூன்று நிறுவனங்களையும் மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்திற்கு விற்று விட்டார்” என்று சிபிஐ வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி, மாறன் சகோதரர்கள் மற்றும் 4 நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இன்று நடைபெற்ற விசாரணையில், மூத்த அரசு வழக்கறிஞர் கே.கே.கோயல் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்போது, "இந்த வழக்கில் விற்பனையாளர் (சிவசங்கரன்) பாதிக்கப்பட்டார். காரணம், அவரை வர்த்தகம் செய்ய அனுமதிக்காமல் நெருக்கடி கொடுத்தார் தயாநிதி மாறன்.

மேலும், சிவசங்கரன் நிறுவனங்கள் குறித்த பல விவகாரங்களை, பிரச்சினைகளை மாறன் நிலுவையில் வைத்துள்ளார், அப்போது தொலைத் தொடர்புத் துறை மத்திய அமைச்சர் பதவியிலிருந்த தயாநிதி மாறன்.

சிவசங்கரனின் 3 நிறுவனங்கள் மீதும் இவர் பிடியை இறுக்க, அவரால் வர்த்தகத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை” என்று நீதிமன்றத்தில் கூறினார்.

ஆனால், மேக்சிஸ் நிறுவனம் சிவசங்கரனின் நிறுவனங்களை வாங்கியவுடன் நிலுவையில் வைத்திருந்த அனைத்து விவகாரங்களும் உடனடியாகக் கையெழுத்தப்பட்டது என்று தயாநிதி மாறன் மீது ஏற்கெனவே புகார் எழுந்தது.

இது பற்றி கோயல் கூறும்போது, “குற்றம்சாட்டப்பட்ட முதலாம் நபர் (தயாநிதி மாறன்), சிவசங்கரன் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வழங்கியிருந்தால் மலேசிய நிறுவனமான மேக்சிஸ் அதிக தொகை கொடுத்து வாங்கியிருக்க வேண்டியிருக்கும்” என்றார்.

வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிமன்றம் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT