குறு சிறு விவசாயிகளுக்கு ஆண் டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங் கும் திட்டத்தை பிரதமர் நரேந் திர மோடி உத்தரபிரதேசத்தில் இன்று தொடங்கிவைக்கிறார். இதன்படி, சுமார் 2 கோடி விவசாயி களுக்கு முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது.
கடந்த 1-ம் தேதி 2019-2020ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்காக ‘பிரதம மந்திரி விவசாய நலநிதி' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.
ரூ.75,000 கோடி ஒதுக்கீடு
இந்தத் திட்டத்தின்படி, 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த உதவித் தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்த நிதியுதவி முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படும். இத்திட்டத்துக் காக ரூ.75,000 கோடி ஒதுக்கப் படுகிறது என்று அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 4 மாதங்கள் இடைவெளியில் 3 தவணைகளாக விவசாயி களுக்கு நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் வருகிற மார்ச் 31-ம் தேதி வரை கணக்கிட்டு முதல் தவணை யாக ரூ.2,000 நிதியுதவியை விவசாயிகளின் வங்கிக் கணக்கு களில் நேரடியாக செலுத்த முடிவு செய்யப்பட்டது.
தகுதியுள்ள விவசாயிகளை தேர்வு செய்யும் பணி அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக் கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்கள் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. மாநில அரசுகள் தாக்கல் செய்த விவசாயிகளின் விண் ணப்பங்களை மத்திய வேளாண் அமைச்சகம் பரிசீலனை செய் தது. இதிலிருந்து சுமார் 2 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சி கள் ஆட்சி நடத்தும் மேற்கு வங்கம், ராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங் கள் மட்டும் புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப் படுகிறது.
இந்தப் பின்னணியில், ‘பிரதம மந்திரி விவசாய நலநிதி' திட் டத்தை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் கோரக் பூரில் இன்று தொடங்கி வைக் கிறார். அப்போது சுமார் ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2,000 நேரடி யாக டெபாசிட் செய்யப்படும். அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்படும் என்று மத்திய வேளாண் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “நாளை (ஞாயிற்றுக்கிழமை) வர லாற்று தினம். ‘பிரதம மந்திரி விவ சாய நலநிதி' திட்டத்தை கோரக் பூரில் தொடங்கி வைக்கிறேன். இதன்மூலம் நம் நாட்டுக்கு உண வளிக்க கடினமாக உழைக்கும் கோடிக்கணக்கான விவசாயி களின் கனவுகள் நனவாகும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கும்..
தமிழகத்திலும் 'பிரதம மந்திரி விவசாய நலநிதி' திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் மாநில அளவிலும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து வட்டாரங்களிலும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த குறு சிறு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தப்படும்.
விழாவில், தமிழக முதல்வர் தலைமையில் ‘பிரதம மந்திரி விவசாய நலநிதி' திட்ட விளக்க சிறப்புக் கூட்டம் நடக்க உள்ளது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் சார்ந்த தொழில்நுட்ப கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழா நிகழ்வுகள், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர்.