ஜம்மு காஷ்மீரில் குல்கம் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் போலீஸ் அதிகாரி ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
''குல்கம் மாவட்டம், தாரிகம் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்தினருடன் இணைந்து, காஷ்மீர் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காஷ்மீர் போலீஸ் டிஎஸ்பி அமன் தாக்கூர் தலைமையில் போலீஸார் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீஸார், ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, ராணுவ வீரர்களும், போலீஸாரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் டிஎஸ்பி அமன் தாக்கூர் தலையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நள்ளிரவு வரை நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் ராணுவ மேஜர் உள்பட 3 போலீஸார் காயமடைந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சண்டையின் போது, பொதுமக்கள் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது அவர்களுக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது''.
இவ்வாறு தில்பாக் சிங் தெரிவித்தார்.
கடந்த 14-ம் தேதி புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட 2-வது மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாகும்.
தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட டிஎஸ்பி அமன் குமார் தாக்கூர், ஜம்மு பகுதியில் உள்ள தோடா மாவட்டம், கோக்லா பகுதியைச் சேர்ந்தவர். அங்கு தனது மனைவி, தாய் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.