இந்தியா

இந்தியா வந்தடைந்த சவுதி இளவரசருக்கு உற்சாக வரவேற்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு

செய்திப்பிரிவு

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த முகமது பின் சல்மானை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

இந்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சல்மானுக்கு வீரர்களின் அணிவகுத்து மரியாதை செலுத்தினர். அதன்பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திந்தார் இளவரசர் சல்மான்.

இதுகுறித்து இளவரசர் சல்மான் கூறும்போது, ”இந்தியா - சவுதி இடையே நன்மை விளைவிக்கக் கூடிய செயல்களை ஏற்படுத்துவோம் என்று நான் உறுதியாக கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி - சவுதி இளவரசர் இன்று (புதன்கிழமை) முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இதில் புல்வாமா தாக்குதலினால்இந்தியா - பாகிஸ்தான் உறவில்  ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், தீவிரவாதத்துக்கும் ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்தும்  முக்கியமாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா - சவுதி இடையே பாதுகாப்பு, மருத்துவம், எண்ணெய் முதலீடு  சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேசப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சல்மானின் பயணம் குறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சரகம் தரப்பில், சவுதி இளவரசர் முகமது சல்மானின் இந்திய பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய போகிறது” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இதனையொட்டி இந்த வாரம் பாகிஸ்தான் சென்றார்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான  சந்திப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் டாலர் மதிப்பிலான  பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.

இந்திய பயணத்துக்குப் பிறகு சல்மான் சீனா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT