மேற்கு வங்கத்தில் பழங்குடியின பள்ளிச் சிறுமி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர் கூட்டிய ஊர் பஞ்சாயத்து உத்தர வின் பேரில் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜல்பைகுரி மாவட்டம், துப்குரி என்ற கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை ஆளும் கட்சி கவுன்சிலர் நமீதா ரே தலைமையில் ஊர் பஞ்சாயத்து கூடியுள்ளது. இதில் உழவுப் பணிக்கான டிராக்டர் வாடகையை தராததால் இச்சிறுமியின் தந்தை அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
அப்போது சிறுமி தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்ததால் ஊர் பஞ்சாயத்தின் கோபம் அவர் மீது திரும்பியது. இதையடுத்து எச்சிலை உமிழ்ந்து அதை சுவைக்குமாறு அச்சிறுமிக்கு நமீதா ரே உத்தரவிட்டாராம். இதையடுத்து அச்சிறுமியின் உறவினர் களுக்கும் கவுன்சிலரின் ஆதரவா ளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டத்துக்குப் பிறகு அச்சிறுமியை காணவில்லை. இந்நிலையில் மறுநாள் காலை அச்சிறுமியின் சடலம் ஆடை களின்றி அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகில் கிடந்தது. சில மீட்டர் தொலை விலேயை அச்சிறுமியின் ஆடைகள் சேதமின்றி கிடந்தன.
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஊர் பஞ்சாயத்து உத்தரவின் பேரில் பழங்குடியின சிறுமி ஒருவர், கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கடந்த வாரம் விஸ்வபாரதி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் பாலியல் பலாத்கார புகார்கள் எழுந்தன. இந்நிலையில் ஜல்பைகுரி சம்பவம் இம்மாநிலத் துக்கு மேலும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் இச்சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொன்றுள்ளதாக அவரது குடும்பத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக நமீதா ரே, அவரது கணவரும் முன்னாள் கவுன்சிலருமான சந்திரகாந்த ரே உள்பட 13 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திரிணமூல் ஆதரவாளர் அனில் பர்மன், அவரது மகன் சுபீர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளர். நமீதா, சந்திரகாந்தரே ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர்.