இந்தியா

மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்: ஐநாவிடம் பிரான்ஸ் வலியுறுத்தவுள்ளது

செய்திப்பிரிவு

கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் புல்வாமாவில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்குத் தடை விதிக்க இன்னும் 2 நாட்களில் ஐநாவிடம் பிரான்ஸ் வலியுறுத்த முடிவெடுத்துள்ளது.

ஐ.நா.விடம் 2வது முறையாக பிரான்ஸ் இத்தகைய வலியுறுத்தலை முன் வைக்கவுள்ளது.

2017-ல் பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவுடன் பாகிஸ்தானில் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு தடை விதிக்கும் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் இந்த முன்மொழிவை சீனா தடுத்து விட்டது.

“பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரைச் சேர்க்க ஐநா.வில் பிரான்ஸ் முன்மொழிவை இன்னும் 2 நாட்களில் மேற்கொள்ளும்” என்று மூத்த பிரான்ஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபரின் ராஜிய உறவுகளுக்கான ஆலோசகர் பிலிப் எடியன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையே பிப்.19ம் தேதி நடந்த ஆலோசனைகளை அடுத்து பிரான்ஸ் இந்த முடிவை எட்டியுள்ளதாக பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழுமனதுடனான தங்கள் இரங்கலைத் தெரிவித்த பிரான்ஸ் தலைமை அஜித் தோவலை அழைத்து இருநாடுகளும் தங்கள் அரசுதரப்பு முயற்சிகளை  ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT