கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக மது விலக்கு கொண்டுவரும் நோக்கில் அரசு அறிவித்துள்ள புதிய மதுபானக் கொள்கையை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
10 ஆண்டுகளில் மாநிலத்தில் படிப்படியாக மது விலக்கை அமல் படுத்தும் நோக்கில் முதல்கட்டமாக 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டுமே பார் லைசென்ஸ் தருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு அவசர கதியில் எடுக்கப் பட்டது அல்ல. இது பற்றி அமைச் சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.
மதுவுக்கு தடை விதிப்பதால் மாநிலத்துக்கு ரூ. 7000 கோடி இழப்பு ஏற்படுவதை மேலோட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மது குடிப்பதால் சமூகத்துக்கு ஏற்படும் இழப்பு அரசுக்கு கிடைக்கும் வருவாயைவிட அதிகம்.
மாநிலத்தில் மூடப்பட்டுள்ள 412 பார்களில் 7,467 பேர் பணிபுரிந்தனர். இவர்களுக்கு ஓணம் பண்டிகை கால அலவன்ஸாக தலா ரூ. 5,000 வழங்க முடிவு செய்துள்ளோம்.
புதிய மதுபான கொள்கையின்படி இந்த 412 பார்கள் தவிர மேலும் 312 பார்களை செப்டம்பர் 12-க்குள் மூடும்படி நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது என்றார்.
டிடிபி ஆலையில் கழிவுகளை சுத்திகரிக்கும் பிரிவு நிறுவப்பட்டதில் ஊழல் நடந்ததாக கூறப்படுவது பற்றி விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என கண்காணிப்பு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி குறிப்பிட்ட முதல்வர், “இந்த வழக்கில் நீதிமன்றம் என் மீது குற்றம் சாட்டவில்லை. தொழிலாளர்கள் நலன் கருதியே இதை நிறுவ நான் நடவடிக்கை எடுத்தேன்” என்றார்.
பள்ளிகளில் கழிப்பறை கட்டாயம்
உம்மன் சாண்டி மேலும் கூறும் போது, “பள்ளிகளுக்கு, கட்டிடங் களின் பாதுகாப்பு தன்மையை மட்டும் ஆராய்ந்து இதுவரை தகுதிச் சான்று வழங்கி வந்தோம். வரும் கல்வி ஆண்டு முதல் கூடுதலாக கழிப்பறை வசதியை கட்டாயம் ஆக்கவுள்ளோம்.
தற்போது 196 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. அனை வருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் இன்னும் 100 நாட்களுக்குள் கழிப்பறை வசதி செய்துதர முடிவு செய்துள்ளோம்.
இதுபோல கழிப்பறை வசதி இல்லாத 1011 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த கல்வி ஆண்டுக்குள் சொந்த நிதியில் இருந்து கழிப்பறை கட்டுமாறு உத்தரவிடப்படும்” என்றார்.