ஒடிசா மாநிலத்தில் மாநில அரசு நடத்திவரும் உண்டு உறைவிடப் பள்ளியொன்றில் 6 ஆம் வகுப்பு படித்து வந்த சக மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 6ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டு தற்போது சீர்திதிருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளான். அம்மாணவி தற்போது கர்ப்பமாகியுள்ளதாக உயரதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த விவரம்:
உண்டுஉறைவிடப் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்த பழங்குடியின மாணவி ஒருவர் கர்ப்பமடைந்து உள்ளதை தற்போதுதான் கவனித்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இப்பள்ளி மாயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ளது.
14 வயதுள்ள அம்மாணவி உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அப்பெண் கர்ப்பமடைந்துள்ள கரு உருவாகி ஆறுமாதங்கள் கடந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
கர்ப்பமடைந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில், தன் வயதுள்ள தனது வகுப்பு மாணவன் ஒருவன் தன்னை பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
நேற்று அம்மாணவன் கைதுசெய்யப்பட்டு மாவட்ட சிறார்நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டதற்கு பிறகு அம்மாணவன் ஆங்கூல் மாவட்டத்தில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அந்த சிறார் காப்பகம் இங்கிருந்து 315 கி.மீ.தொலைவில் உள்ளது.
ஒடிசாவில் டீன்ஏஜ் கர்ப்ப சம்பவங்கள் அரசை உலுக்கிய ஒரு மாதத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. தென்கனால் மாவட்டத்தில் 8ஆம் வகுப்பைச் சேர்ந்த பழங்குடியின மாணவி கர்ப்பமானது கண்டுபிடிக்கப்பட்டது.
காலஹந்தி மாவட்டத்தில் கடந்த மாதம் இன்னொரு சம்பவத்தில் மாணவி ஒருவர் கருக்கலைப்பு மாத்திரைகள் உட்கொண்டதாக சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.