இந்தியா

மோடியின் ஆட்சியில் நீதித்துறை, சிபிஐ, ஆர்பிஐ அழிக்கப்படுகின்றன. யஷ்வந்த் சின்ஹா தாக்கு

பிடிஐ

பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசமைப்பு நிறுவனங்களான நீதித்துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை அழிக்கப்படுகின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.

மும்பையில், நேற்று ஆசியா சொசைட்டி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான யஷ்வந்த் சின்ஹா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோரை உயர்நிலை குழு தேர்வு செய்யலாம். ஆனால், அதற்குப்பதிலாக அவர்களைத் தேர்வு செய்யவதில் முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமரிடம் அளிக்கப்படுவதற்கான காரணம் தெரியவில்லை. நீதித்துறையிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. நீதிபதிகளை நியமிக்க சுயச்சார்புள்ள அமைப்பு தேவை.

நமக்குள் சமாதானங்கள் சொல்வதைவிட்டு, விரைவாக இதை மாற்றும் நடவடிக்கையில் இறங்குவது அவசியம். இல்லாவிட்டால், தற்போது இருக்கும் சூழலில்தான் இருப்போம், எந்த விஷயமும் முன்னேற்றத்துக்குச் செல்லாது.

உச்சநீதிமன்றம், சிபிஐ, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி  போன்ற அரசயமைப்பு நிறுவனங்கள், பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் அழிக்கப்பட்டு வருகின்றன.

 தேசிய போர் நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு அரசியல்  பேசியுள்ளதை கற்பனை செய்து பார்க்கமுடிகிறதா? அந்த இடம் அரசியல் பேசுவதற்கான இடமா? இதுபோன்று பல நடக்கிறது. எத்தனை பேர் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்குச் சென்றால் அரசியல் பேசக்கூடாது என்ற ஆரோக்கியமான மரபு இருக்கிறது. ஆனால், அதைவிடுத்து, பிரதமர் மோடி தான் மேற்கொள்ளும் வெளிநாடு பயணங்களின்போது, உள்நாட்டு அரசியல் குறித்து அங்கு பேசுகிறார். யாரேனும் இது குறித்து அக்கறை கொண்டார்களா.

 நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, அரசின் கொள்கை குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பேட்டியளிக்காத நடைமுறையும் இருக்கிறது.  இந்த விதி தற்போது கடைப்பிடிக்கப்படுகிறதா?

உச்சநீதிமன்றத்தைப் பொருத்தவரை, மூத்த நீதிபதி ஒருவர் பதவி ஓய்வு பெறுகிறார். பின்னர் அவர், தலைமை நீதிபதி நிர்ப்பந்தத்தில் இருப்பதாகப் பேட்டியளிப்பது  உச்சநீதிமன்றமும் சமரசத்துக்கு உள்ளாகியிருப்பதை காட்டுகிறது.

இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசினார்.

SCROLL FOR NEXT