இந்தியா

2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது: மாநிலங்களவையில் விவாதமில்லை

பிடிஐ

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 6-வது மற்றும் கடைசி, 2019-20-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது.

இந்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு வரித்தள்ளுபடி அளித்தல், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை சலுகை திட்டங்கள் இதில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசிநாள் கூட்டம் இன்று நடந்தது. மக்களவைத் தேர்தலுக்குப்பின் புதிய அரசு பதவிஏற்று, பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்வரை அரசின் செலவினத்துக்கு நிதிஒதுக்கும் செலவினத்துக்கான மசோதா, நிதி மசோதா ஆகியவை மக்களவையில் முழு விவாதத்துக்குப் பின் நிறைவேறியது.

ஆனால், மாநிலங்களவையில் எம்.பி.க்கள் காலை முதல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்டமசோதா, ரஃபேல் ஒப்பந்தம், மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ சோதனை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி வெளிநடப்பு மற்றும் அமளியில் எம்.பி.க்கள் ஈடுபட்டனர்.

இதனால் அவையை 40 நிமிடங்கள் வரை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். அதன்பின் அவை மீண்டும் கூடியபின், நிதித்துறை இணையமைச்சர் சிவபிரதாப் சிங் சுக்லா மசோதாக்களை அறிமுகம் செய்தார்.

எம்.பி.க்களிடையே ஒருமித்த கருத்தொற்றுமை கொண்டுவரப்பட்டு, செலவினத்துக்கான மசோதா, நிதி மசோதா ஆகியவை விவாதமின்றி குரல்வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.

மேலும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் விவாதமின்றி, எம்.பி.க்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேறியது. அதன்பின் மாநிலங்களவை தேசிய கீதத்துடன் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் விஜய் கோயல் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானம் விவாதமின்றி, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் செலவினத்துக்கான மசோதா கடந்த 11-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்று நிதி மசோதா நிறைவேறியது.

SCROLL FOR NEXT