இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 1,42,000 பேர் மீட்பு: ராணுவம் தகவல்

செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 1,42,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால், ஜீலம் நதி பெருக்கெடுத்து மாநிலம் முழுவதும் வெள்ளம் புகுந்தது.

தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட இந்த பேரழிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன், முப்படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

12-வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 1,42,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், 13 டன் அளவிளான தண்ணீரை சுத்திகரிக்கும் மாத்திரைகள், நாள் ஒன்றுக்கு 1.2 லட்சம் தண்ணீர் பாட்டில்களை தயாரிக்கும் திறன் கொண்ட 6 தண்ணீர் சுத்திகரிக்கும் உபகரணங்கள் ஆகியன ஸ்ரீநகருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் சேவையை சீரமைக்க தேவையான உபகரணங்களும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

SCROLL FOR NEXT