நாடாளுமன்றத்தில் வரும் ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடவேண்டும் என்று உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கோரியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை திங்கள்கிழமை நேரில் சந்தித்து அவர் இது தொடர் பாக மனு அளித்தார்.
புதிய அரசால் அமைக்கப்பட்ட ‘அரசு அதிகாரப்பூர்வ மொழியின் நாடாளுமன்ற உயர்நிலைக்குழு’ முதல் கூட்டம் அதன் தலைவரான மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் திங்கள்கிழமை நடந் தது. அதில், கலந்து கொண்ட அதன் உறுப்பினர்களில் ஒருவரான தருண் விஜய், உள்துறை அமைச்சரிடம், “ஜனவரி 2015 முதல் திருவள்ளுவர் பிறந்த நாளை அதிகாரப்பூர்வ மொழிக்கான குழு சார்பில், நாடாளுமன்றத்தில் கொண் டாடவேண்டும், அதில் தமிழின் பாரம்பரியம் மற்றும் இந்தியாவின் மற்ற மொழிகளின் பெருமைகள் எடுத்துக் கூறப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர், உடனடியாக அக் குழுவின் செயலாளரிடம் இது குறித்து ஆலோசிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் நான் தமிழுக்காக தொடங்கியுள்ள இயக்கம் வலுப்பெறுவதுடன், அம்மொழியின் பாடங்களை வட இந்தியாவின் 500 பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடங்க முயற்சி செய்வேன்” என்றார்.
இவர், ஏற்கெனவே தமிழ் மொழியை அரசு மொழிகளில் ஒன்றாகவும், திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசி னார். பிறகு, சென்னை உயர் நீதி மன்ற அலுவல் மொழியாக தமிழை அமல்படுத்த வேண்டும் எனவும் குடியரசுத் தலைவரிடம் மனு அளித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.