ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குச் சென்றதாலேயே பாரத ரத்னா விருதுக்கு பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பொதுச் செயலாளர் டானிஷ் அலி கூறியிருக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் அலி கூறும்போது, "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிரணாப் முகர்ஜிக்கு முன்னதாக ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம் ஆகியோருக்கே இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்குச் சென்றதாலேயே பிரணாப் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மோடிக்கு பொதுவான தொழிலதிபர் நண்பர்கள் இருக்கின்றனர். இந்து இந்தத் தெரிவில் பங்கு வகித்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
சித்தகங்கா மடாதிபதிக்கு ஏன் வழங்கவில்லை?
அதேபோல், கர்நாடக மாநிலம் துமக்கூருவில் உள்ள சித்தகங்கா மடத்தின் மூத்த மடாதிபதியும், கல்வியாளருமான சிவகுமார சுவாமிக்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கவில்லை என்றும் டேனிஷ் அலி கேள்வி எழுப்பியிருக்கிறார். சிவகுமார சுவாமி கடந்த 22-ம் தேதி அவரது 111-வது வயதில் காலமானார்.
"பாஜக நினைத்திருந்தால் சித்தகங்கா சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்கலாம். அவரது சித்தாந்தம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒத்துப் போகவில்லை என்பதாலேயே அவருக்கு விருது மறுக்கப்பட்டிருக்கிறது" என்றும் டேனிஷ் அலி சாடியுள்ளார்.