உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில்(முந்தைய பெயர் அலகாபாத்) கும்ப மேளா திருவிழா மகரசங்கராந்தி நாளான இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது.
முதல்நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவும் நடக்கிறது. இந்த முறை கும்பமேளா திருவிழா பிரயாக்ராஜ் நகரில் இன்று தொடங்கியது. 50 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா மார்ச் 4-ம் தேதி வரை நடக்கிறது.
50 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்தத் திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து இந்துக்கள் வந்து புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருவிழாவில் ஏறக்குறைய 12 கோடி வரை பங்கேற்பார்கள் என்று உ.பி. மாநில அரசு எதிர்பார்க்கிறது.
முதல்நாளான இன்று 13 அகாராக்கள் இன்று புனித நீராடுகிறார்கள். ஒவ்வொரு அகராக்களுக்கும் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் அகாராக்களாக சன்னியாசி அகாராக்கள், அதாவது சாதுக்கள் இன்று அதிகாலையில் புனித நீராடினார்கள்.
இந்த கும்ப மேளா திருவிழாவுக்காக உ.பி. அரசு ரூ.4200 கோடி செலவிடுகிறது, இந்த திருவிழாவுக்காக கும்ப் நகரி என்ற தற்காலிகமாக நகரையும் 32 ஆயிரம் ஹெக்டேரில் உருவாக்கியுள்ளது. இங்கு மற்ற நகரங்களைப்போல மருத்துவமனைகள், போலீஸ் நிலையங்கள், வர்த்தக கட்டிடங்கள், தங்குமிடங்கள் என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன.
கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக 5 கிமீ நீளத்துக்கு குளியல் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றைக் கடக்க தற்காலிகப் பாலும் அமைக்கப்பட்டுள்ளது.
உபி அ ரசின் 15 துறைகள், மத்திய அரசின் 28 துறைகள் ஆகியவை இணைந்து கும்ப மேளா திருவிழாவுக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த கும்பமேளாவுக்காக தானியங்கி சிறப்பு வானிலை மைய சேவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதை மத்திய அமைச்சர் ஹர்ஸ் வர்தன் நேற்று அறிமுகம் செய்தார். இந்தத் தானியங்கி வானிலை மையம், அடுத்தடுத்து 3 நாட்களுக்கான வானிலை குறித்த அறிக்கையை அறிவிக்கும். இதற்குக் கும்ப மேளா வானிலை சேவை ஆப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 13 சாதுக்கள் அமைப்புகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் இவ்விழாவில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் இங்கு வந்து சேர்ந்தனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் நகரின் பல பகுதிகளில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில், இன்று மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஜீவநதிகள் சங்கமமாகும் 'திரிவேணி சங்கமம்' பகுதியில் புனித நீராடினார்கள்.