மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியை தாங்களே நியமனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என 5 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது.
மாநிலத்துக்கு குறிப்பிட்ட அளவு டிஜிபிக்கள் என வரைமுறை உண்டு. ஒவ்வொரு ஐபிஎஸ்ஸுக்கும் ஒரு கனவு இருக்கும். அது சிட்டி கமிஷனராவது, மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபியாவது. இது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் கைகோர்க்கும் அரசியல் காரணமாக தகுதியானவர்கள் சாதாரண துறைக்கு தள்ளப்பட்டு, தமக்கு வேண்டியவர்களை நியமிக்கும் போக்கு உள்ளதை சகித்துக்கொண்டு அதிகாரிகள் பணியாற்றும் நிலை உள்ளது.
இதில் டிஜிபி பதவி மிக முக்கியமானது. உதாரணமாக தமிழகத்துக்கு 6 டிஜிபிக்கள் கோட்டா உண்டு. இதில் அவரவர் ஓய்வுபெறுவதும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர் பதவிக்கு வருவதும் நடைமுறையில் உள்ள ஒன்று. டிஜிபி பதவியில் உள்ளவர்களில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிதான் சக்தி வாய்ந்தது. இதில் பணியமர்த்தப்படும் ஒருவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வின்றி பணிபுரிவார்.
இப்படி நியமிக்கப்படுபவர்கள் அரசுக்கு வேண்டியப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என ஒவ்வொரு அரசும் எண்ணும். அப்படி முதல் மூன்று இடத்தில் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றால் ஓய்வு பெறும் நேரத்தில் தமக்கு வேண்டிய அதிகாரிக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை அளித்து அதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வைத்துக்கொள்ளும் போக்கு உண்டு.
இதன்மூலம் முறையாக வருபவர் வர முடியாமல் அதன் பாதிப்புகள் அடுத்தடுத்து பதவி உயர்விலும் எதிரொலிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு தமிழகத்தை உதாரணமாக கூறலாம். மற்ற மாநிலங்களில் 1988-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகள் டிஜிபியாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் 1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளே டிஜிபி ஆகமுடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தகுதியிருந்தும் டிஜிபியாக பதவி உயர்வு பெற முடியாமல் ஓய்வுபெறும் நிலையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி 6 ஏடிஜிபிக்களை டிஜியாக தகுதி உயர்த்தும் சிறப்பு அங்கிக்காரத்தை பெற்றுள்ளது. ஆனாலும் தமிழகத்திற்கு 6 டிஜிபிக்கள் கோட்டா உள்ள ஒருவர் ஓய்வுப்பெற்ற நிலையில் தற்போது 5 டிஜிபிக்கள் உள்ள நிலையில் கூடுதலாக 6 டிஜிபிக்களை நியமனம் செய்வதன்மூலம் 11 டிஜிபிக்கள் இருக்கும் புதிய சட்டசிக்கல் உருவாக உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற நடைமுறைகள் காரணமாக மற்ற மாநிலங்களும் இதை கடைபிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை எதிர்த்து ஏற்கெனவே பிரகாஷ் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த நிலையை கணக்கில் எடுத்த உச்சநீதிமன்றம் சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் விதிமுறைகளை அமல்படுத்தி உத்தரவிட்டது பணியில் உள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபியின் பணி ஓய்வுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக, புதிய பரிந்துரை பெயர்களை யுபிஎஸ்சிக்கு மாநில அரசு அனுப்ப வேண்டும் என்றும், யுபிஎஸ்சியால் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் அந்தந்த மாநில அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டு, அவர்களில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமனம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர் 2 ஆண்டுகள் பணியில் இருக்கும் சீனியர் அதிகாரியாக இருக்கும்வகையில் நியமனம் இருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது. இடைக்கால டிஜிபியாகவோ, வேறு ஒரு பொறுப்பில் உள்ளவரை சட்டம் ஒழுங்கை கூடுதலாக கவனிக்கும் இடைக்கால எற்பாடுகள் எதையும் செய்யக்கூடாது என வழிக்காட்டு முறைகளை அமல்படுத்தியது.
இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, உபி, மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மாநில அரசுகள் இந்த உத்தரவை எதிர்த்து மாநில டிஜிபிக்களை அந்தந்த மாநில தேர்வுக்குழுவே தேர்வு செய்து நியமிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்தன. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் அமர்வு முன் இன்று வந்தது.
டிஜிபிக்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே உள்ளது அவைகள் அப்படியே தொடரவேண்டும் என தெரிவித்த அமர்வு 5 மாநிலங்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.