இந்தியா

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

இரா.வினோத்

கர்நாடகாவின் மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் தொடக்க நிலை வரைவு அறிக்கைக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, விரைவில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த நவம்பரில் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, நவம்பர் 30-ம் தேதி மேகேதாட்டு அணை கட்ட தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மனுவுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் உத்தரவிட்டது.

இதற்கு கர்நாடக அரசு கடந்த 4-ம் தேதி 20 பக்க அளவில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு சரியாக நடைபெறுவதால், தமிழக அரசு மேகேதாட்டு திட்டத்தை எதிர்ப்பது சரியாகாது. தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பாக உள்ளதால், அந்த மனுவை நிராகரிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு கடந்த 12-ம் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், “மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாறாக, அணை கட்ட அனுமதி வழங்கவில்லை. எங்களது அனுமதி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல. தமிழக அரசின் மனுவில் நிறைய தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதால், அதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கோரியது.

இதனிடையே கடந்த 19-ம் தேதி மேகேதாட்டு அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்த கர்நாடகாவின் காவிரி நீர் நிர்வாக வாரியம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தில் நீதிபதி ஏ. எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு மேகேதாட்டு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கர்நாடகா மற்றும் மத்திய அரசின் மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

விரிவான அறிக்கை தாக்கல்

கர்நாடக நீர்வளத்துறை முதன்மை செயலாளர் மற்றும் காவிரி நீர் நிர்வாக கழக தலைமை பொறியாளர் அடங்கிய குழு கடந்த 19-ம் தேதி மத்திய நீர் ஆணையத்தில் மேகேதாட்டு திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள் ளது. அதில் குடிநீர் மற்றும் மின்சார தேவைக்காக மட்டுமே மேகேதாட்டு வில் புதிய அணை கட்டப்பட இருப்ப தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT