குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும்கூட கண்ணய்யா குமார் வரும் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களம் காண்பது உறுதி என அக்கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமையன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தீவிரவாதிகளை ஆதரித்து கோஷமிட்ட வழக்கில் முன்னாள் மாணவர் தலைவர் கண்ணய்யா குமார் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, "மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அமையும் மெகா கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். இடதுசாரிகளுக்கு மூன்று சீட்கள் கோரியுள்ளோம். பெகுசராய் தொகுதியை கண்ணய்யா குமாருக்கும், உஜியார்பூரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராம் தேவ் வர்மாவுக்கும் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும்கூட தேர்தலில் கண்ணய்யா குமார் போட்டியிடுவது உறுதி" எனத் தெரிவித்துள்ளது.
தனக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி பேசிய கண்ணய்யா குமார், "3 ஆண்டுகளுக்குப் பின் எனக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததற்காக போலீஸாருக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் இருந்தே இதில் அரசியல் நோக்கம் இருப்பது தெளிவாக புரிகிறது.நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.