இந்தியா

வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிட உ.பி. காங்கிரஸார் விருப்பம்

ஆர்.ஷபிமுன்னா

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா வத்ரா போட்டியிட வேண்டும் என உபி காங்கிரஸார் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தி உ.பி.யின் கிழக்குப்பகுதி நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உபியின் வாரணாசியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, தற்போது தீவிர அரசியலில் இறக்கப்பட்டுள்ள பிரியங்கா போட்டியிட வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

இதற்கான சுவரொட்டியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் 2014 தேர்தலில் மோடியை எதிர்த்த அஜய் ராய் ஆகியோருக்கு இடையே பிரியங்காவின் படம் அச்சிடப்பட்டுள்ளன. ’பிரியங்காவை எம்பியாக்க காசி மக்கள் குரல் கொடுங்கள்’, என அதற்கு தலைப்பும் இட்டுள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அஜய் ராய் கூறும்போது, ‘மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்காஜியை வெற்றியடையச் செய்ய உபி காங்கிரஸார் தயாராக உள்ளனர். இந்த போட்டியால் அருகிலுள்ள பிஹார் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு சாதகமாக தாக்கம் ஏற்படும்.’ எனத் தெரிவித்தார்.

மேலும் அஜய் ராய், பிரியங்கா வரவால் காங்கிரஸ் வரும் மக்களவை தேர்தலுடன் 2022-ன் உபி மாநில சட்டப்பேரவையிலும் வென்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

உ.பி.யின் வாரணாசி மாவட்டத்தில் பாஜக சார்பாக மூன்று முறையும், சுயேச்சையாகவும் காங்கிரஸிலும் தலா ஒரு முறையும் எம்எல்ஏவாக இருந்தவர் அஜய் ராய். இவருக்கு 2014 தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்டதில் 75,614 வாக்குகளுடன் மூன்றாவது இடம் கிடைத்தது.

மாபெரும் வெற்றி பெற்ற மோடிக்கு 5,81,022, இரண்டாவது இடம் வகித்த ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு 2,09,238 வாக்குகளும் கிடைத்திருந்தன.

SCROLL FOR NEXT