இந்தியா

8-ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயமா? - மத்திய அமைச்சர் திட்டவட்ட மறுப்பு

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் 8-ம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடக்க கல்வி முதல் நடுநிலை வகுப்பு வரை பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நியமித்தது.

இந்த குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் சமர்பித்துள்ளது. அதில் நாடுமுழுவதும் 8-ம் வகுப்பு வரை ஒரே பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் எனவும், ஹிந்தியை கட்டாயமாக கற்கபிக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஹிந்தி உட்பட எந்த ஒரு மொழியையும் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பள்ளி கல்வி குறித்து ஆய்வு செய்த கமிட்டி இதுபோல எந்த பரிந்துரையையும் அளிக்கவில்லை. இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது. மாநிலங்களின் மொழிக்கொள்கையில் தலையிடும் எண்ணம் மத்திய அரசுக்கு துளியும் இல்லை’’ எனக் கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT