உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டுமென்று அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரியங்காவுக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்து, முதல் கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் பணியாற்ற பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் மாநிலத்தின் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரியங்கா படங்களை ஏந்தியவாறு ''கோரக்பூர் கி யாஹி புக்கார், பிரியங்கா காந்தி சான்சேடு இஸ்ஸ் பார்'' (இதுவே கோரக்பூர்வாசிகளின் குரல்: இந்த முறை பிரியங்கா காந்தி தான் எம்.பி. ) என்ற கோஷங்களை எழுப்பினர்.
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் நாடாளுமன்றத் தொகுதியில் 1998லிருந்து ஐந்து முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாநில முதல்வராகப் பொறுப்பேற்றபின் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது அத்தொகுதியில் சமாஜ்வாடி கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரவீண் குமார் நிஷாத் எம்பியாக உள்ளார்.