இந்தியா

கவுரவம்: குடியரசு தினத்தில் அசாம் ரைபிள் பெண்கள் படையை வழிநடத்திய பஸ் கண்டக்டர் மகள்

செய்திப்பிரிவு

இன்று குடியரசு தின அணிவகுப்பில்  நாட்டிலேயே மிகப் பழமையான அசாம் ரைபிள் படையை தலைமையேற்று பெண் மேஜர் ஒருவர் வழிநடத்திச் சென்று பெருமை சேர்த்தார். வரலாற்றில் பெண் கமாண்டோ ஒருவர் வழிநடத்தியது இதுதான் முதல் முறையாகும்.

நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ராஜபாதையில் இன்று நடந்த பேரணியில் நாட்டிலேயே பழமை வாய்ந்த அசாம் ரைபிள் படை அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு மரியாதையில் அசாம் ரைபிள் படையை, பெண் மேஜரான 30வயதான குஷ்பு கன்வர் வழிநடத்திச் சென்றார். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த குஷ்புவின் தந்தை பஸ் கண்டக்டர்.

பஸ் கண்டக்டர் மகளான குஷ்பு கன்வர், கடந்த 2012-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின், அசாம் ரைபிள் படைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து அசாம் ரைபிள் படையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று நடந்த அணிவகுப்பு பேரணியில் அசாம் ரைபிள் படையை வழிநடத்திய பெருமையையும் பெற்றார்.

இது குறித்து குஷ்பு கன்வர் கூறுகையில், "அசாம் ரைபிள் மகளிர் படையை வழிநடத்திய மிகப்பெரிய பெருமை எனக்குக் கிடைத்துள்ளது. இதற்காக நாங்கள் கடுமையாகப் பயிற்சி எடுத்தோம். ராஜஸ்தானில் சாதாரண பஸ் கண்டக்டர் மகளாக இருந்த எனக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. இனி இந்தியாவில் எந்த சாமானியப் பெண்ணும் இதுபோல் சாதனை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

நாட்டின் பழமையான அசாம் ரைபிள் படையை வழிநடத்தி வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறேன். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் பரேடு செய்ததற்கு பலன் கிடைத்துவிட்டது. அதிகாலை 3 மணிக்கு நாங்கள் எழுந்து, 4.30 மணியில் இருந்து பயிற்சி எடுத்தோம். எங்களுடைய கோரிக்கையான அணிவகுப்பில் இடம் பெற வேண்டும் என்பதும் நிறைவேறியது.

அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் நடந்தபோது, அசாம் ரைபிள் பெண்கள் அதற்குப் பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தினர். இந்திய மியான்மர் எல்லையில் சோதனைச் சாவடி அமைத்து அந்த ஊடுருவலை தடுத்ததும் எங்கள் படைதான். ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம்''.

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT