பாஜகவின் மூன்று முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சிங் சவுகான், ராமன் சிங் மற்றும் வசுந்தரா ராஜே ஆகியோர் தம் தோல்விக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர்களாக விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால், அந்த மூவரையும் தம் கட்சியின் தேசிய துணைத்தலைவர்களாக அமர்த்தினார் தலைவர் அமித் ஷா.
தொடர்ந்து மூன்று முறையாக சத்தீஸ்கரில் ராமன்சிங் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங்கும் பாஜகவின் முதல்வர்களாக இருந்தனர். ராஜஸ்தானில் இருந்த பாஜக ஆட்சியில் வசுந்தரா முதல்வர் பதவியில் இருந்தார்.
இந்த மூன்று மாநிலங்களுக்கும் கடந்த மாதம் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தன் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுத்தது. இதில், சத்தீஸ்கர் தவிர மற்ற இரு மாநிலங்களில் பாஜகவிற்கு படுதோல்வி ஏற்படவில்லை. எனினும், அம்மூன்று மாநிலங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர்களாக பாஜகவின் முன்னாள் முதல்வர்கள் தொடர விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இந்த மூன்று முன்னாள் முதல்வர்களையும் பாஜக மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த திட்டமிட்டது.
இதையடுத்து சிவராஜ், ராமன் சிங் மற்றும் வசுந்தரா ஆகியோர் பாஜகவின் தேசிய துணைத்தலைவர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மீதான உத்தரவு நேற்று மாலை வெளியாகி உள்ளது. இந்த மூன்று தலைவர்களும் தாம் ஆட்சி செய்த மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காகப் பாடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த உத்தரவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
முன்னாள் எம்.பி.க்கள்
சிவராஜ் சிங் ம.பி. முதல்வராவதற்கு முன்பாக மூன்று முறை பாஜகவின் மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஐந்துமுறை மக்களவை உறுப்பினராக இருந்த வசுந்தரா மத்திய அமைச்சரவையிலும் பதவி வகித்தவர்.
மீண்டும் மக்களவைக்குப் போட்டி
ராமன் சிங்கும் ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்த போது பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தார். இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் சிவராஜ், ரமன்சிங் மற்றும் வசுந்தரா மக்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளும் உள்ளன.