இந்தியா

பெங்களூர் மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

செய்திப்பிரிவு

பாலியல் பலாத்கார வழக்கில் நித்யானந்தாவுக்கு பெங்களூர் மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆண்மை பரிசோதனை நடைபெற்றது.

பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவின் ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 2010-ம் ஆண்டில் தங்கியிருந்த வெளிநாடு வாழ் இந்தியப் பெண்ணை நித்யானந்தா பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது பெங்களூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக போலீஸார் முடிவு செய்தனர்.

வழக்கை விசாரித்த பெங்களூர் ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த சமீபத்தில் உத்தரவிட்டது.

அதன்படி பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு பொது மருத்து வமனையில் நித்யானந்தாவுக்கு திங்கள்கிழமை ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. காலையில் மருத்துவ மனைக்கு வந்த அவருக்கு மாலை வரை பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

நித்யானந்தாவை பரிசோதித்த டாக்டர் டி.துர்கண்ணா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியபோது, ‘‘6 பேர் கொண்ட குழு நித்யானந்தாவுக்கு சோதனை நடத்தியது. அறிக்கையை 2 நாட்களில் போலீஸாரிடம் அளிப்போம்’’ என்றார்.

குரல் பரிசோதனை

ஆண்மை பரிசோதனையின் ஒரு பகுதியாக நித்யானந்தாவுக்கு குரல் பரிசோதனையும் நடைபெற்றது. இதற்காக அவர் மடிவாளா பகுதியில் உள்ள தடயவியல் ஆய்வுக் கூடத்துக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குரலா, பெண் குரலா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது. தொலைபேசியில் நித்யானந்தா மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இதனை அவர் மறுத்து வருகிறார். எனவே தொலைபேசி யில் பேசியது யார் என்பது குரல் பரிசோதனை மூலம் கண்டறி யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெற்றதை தொடர்ந்து விக்டோரியா மருத்து வமனை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

SCROLL FOR NEXT