இந்தியா

இந்திய கலாச்சாரம், வரலாறு, ஆன்மிகத்தின் மீது கம்யூனிஸ்ட்களுக்கு மரியாதை இல்லை: பிரதமர் மோடி கடும் தாக்கு

பிடிஐ

இந்தியக் கலாச்சாரம், வரலாறு, ஆன்மிகத்தின் மீது கம்யூனிஸ்ட்களுக்கு மரியாதை இல்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி ஆவேசமாகப் பேசினார்.

கொல்லத்தில் 13 கி.மீ தொலைவுள்ள புறவழிச்சாலையை நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்துவைத்தார். அதன்பின் கொல்லத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதில் கொல்லம், மாவேலிக்கரா, ஆலப்புழா சட்டப்பேரவைத் தொகுதிகளின் பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டர். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சபரிமலை விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசைக் கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த சில மாதங்களாக நாட்டுமக்கள் பெரும்பாலானோர் சபரிமலை விவகாரத்தைப் பேசி வருகின்றனர். ஆனால், சபரிமலை விவகாரத்தில் கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் செயல்பாடு வரலாற்றில் மிகப்பெரிய தலைகுணிவை, வெட்கக் கேட்டை எந்த அரசுக்கும், கட்சிக்கும் ஏற்படுத்தும்.

கம்யூனிஸ்ட்களுக்கு இந்திய கலாச்சாரம், வரலாறு, ஆன்மிகம் ஆகியவற்றின் மீது மரியாதை கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இவர்கள் இதுபோல் வெறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள் என்று யாரும் கற்பனை செய்துபார்க்கவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் சபரிமலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது. நேரத்துக்கு ஏற்றார்போல் தங்கள்நிலைப்பாட்டை மாற்றுகிறது. நாடாளுமன்றத்தில் ஒருவிதமாகப் பேசுகிறார்கள், ஐயப்பன் கோயில் அமைந்திருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒருவிதமாக காங்கிரஸார் பேசுகிறார்கள். நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மாறுகிறது.

சபரிமலை விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சிக்கு நான் சவால் விடுகிறேன்.உங்களின் இரட்டைப் பேச்சு வெளிப்பட்டுவிடும். ஆனால், சபரிமலை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது, தெளிவாக இருக்கிறோம்.

நாங்கள் சொல்வதைப்போலவே நடந்து கொள்வோம். கேரளாவின் கலாச்சாரத்தை காக்கும் வகையில் ஒரு கட்சி செயல்படுகிறது என்றால், அது பாஜக மட்டும்தான்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கேரள மக்களுக்காக இரவுபகலாக உழைக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். சபரிமலை விவகாரத்தில் பாலின சமத்துவம் பேசும் இரு கட்சிகளும் செயல்பாட்டில் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள்.

முத்தலாக் விஷயத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலை நடத்துகின்றன. முத்தலாக் என்பது முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி, இதை இன்னும் நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதை ஒழிக்கத்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கின்றன.

கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் உயர்சாதியில் உள்ள ஏழைகளுக்கு இடஒதுக்கீடு அளித்து வரலாற்றுச் சட்டம் இயற்றியுள்ளோம். நாட்டில் உள்ள ஒவ்வொரு சாதியினரும், சமூகத்தினரும் சமமான வாய்ப்பு பெற வேண்டும் என நம்புகிறோம்.

மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஏழை மக்களைப் புறக்கணிக்கின்றனர். கேரளாவில் பாஜக கால்பதிக்கும். திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து, அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளோம்.

இப்போது எங்களைப் பார்த்து ஐக்கிய ஜனநாயக முன்னணியும், இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஏளனம் செய்யலாம், சிரிக்கலாம். நான் அவர்களுக்குச் சொல்வதெல்லாம், பாஜக தொண்டர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள், உங்கள் கற்கள், கம்புகள், வன்முறைகள் அனைத்தும், பாஜக தொண்டர்களின் ஒழுக்கத்தைச் சிதறடிக்கமுடியாது. திரிபுராவில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தீர்களா. உங்களைப் பூஜ்ஜியமாக்கி(மார்க்சிஸ்ட்) நாங்கள் ஆட்சியில் அமர்ந்தோம். திரிபுராவில் நடந்தது போல் கேரளாவில் நடக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT