கேரளாவில் நீண்டகாலமாகப் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த அகஸ்தியர்கூட மலைக்குப் பெண் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, அங்கு டிரக்கிங் செல்ல ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம், நெய்யாறு வனச்சரணாலயத்தில் அமைந்துள்ளது அகஸ்தியர்கூடம். அகஸ்தியர் முனிவர் இங்குத் தங்கி இருந்ததாக இங்குள்ள ஆதிவாசி மக்களான கனி பழங்குடியினர் நம்புகின்றனர். இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து 1,868 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
அகஸ்தியர்கூட மலையில், அகஸ்தியர் முனிவருக்குத் தனியாக கோயில் இருந்தாலும் இங்கு வழிபாடு செய்வதற்கு பெண்களுக்கு காலங்காலமாக அனுமதியில்லை. இங்குள்ள கனி பழங்குடியைச் சேர்ந்த பெண்கள் கூட சிலை அருகே செல்வதுகிடையாது. இந்த நடைமுறையைக் கனி பழங்குடியின மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மலைக்குப் பாலின பாகுபாடுஇன்றி அனைத்துத் தரப்பினரும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் நீண்டஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், பெண்கள் வருவதற்கு ஆதிவாசி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், கேரளஅரசும் கண்டுகொள்ளவில்லை.
இந்தச்சூழலில், மலப்புரத்தைச் சேர்ந்த ‘விங்ஸ்’ என்ற பெண்கள் நலஅமைப்பும், கோழிக்கோட்டைச் சேர்ந்த ‘அன்வேஷ்’ என்ற மகளிர் நல அமைப்பும் அகஸ்தியர்மலையில் பாலினபாகுபாடு காட்டப்பட்டு பெண்கள் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையை நீக்க வேண்டும் எனக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி அளித்த தீர்ப்பில், “ பாலின அடிப்படையில் அகஸ்தியர்கூடத்தில் பெண்கள் செல்ல தடைவிதிக்க முடியாது. அனைத்துப் பெண்களும் மலைக்குச் செல்லலாம்” எனத் தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கேரள வனத்துறை அகஸ்தியர்கூட மலைக்கு டிரக்கி செல்வோர்க்கான ஆன்-லைன் முன்பதிவை நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 மணிநேரத்தில் அனைத்தும் முடிந்தது.
வரும் 14-ம் தேதி அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள், ஆண்கள் அனைவரும் மலையேற்றத்துக்குச் செல்ல உள்ளனர். ஏறக்குறைய 41 நாட்கள்வரை அகஸ்தியர்கூட மலைக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். மேலும், இந்த மலைக்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நலமாக இல்லாதவர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு காரணங்களாக அனுமதி மறுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அமைச்சர் கே.ராஜுவிடம் தி இந்து(ஆங்கிலம்) சார்பில் கேட்டபோது, அவர் கூறுகையில், “ அகஸ்தியகூட மலைக்குப் பெண்கள் மலைஏற்றம் செல்லலாம். அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்களுக்கான எந்தச் சிறப்பு வசதிகளும் அந்த மலையில் செய்ய இயலாது. ஏனென்றால், அதுபாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும்.
கழிப்பிடம் கட்டுவதற்குக்கூட எந்தக் கட்டுமானமும் கட்ட இயலாது. தங்குவதற்கும் எந்தவிதமான வசதிகளும் அங்குச் செய்ய இயலாது. அங்குப் பாரம்பரியமாக வாழும் பழங்குடியினத்தவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதுபோல் அமைந்துவிடும். அதனால்தான் இந்த முறை மிகக் குறைந்த அளவிலான பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இது குறித்து மண்டல வனக்காப்பாளர் சுரேந்திர குமார் கூறுகையில், “ அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட அடர்ந்த மலைப்பகுதி என்பதால், இங்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சவாலான விஷயமாகும். மேலும், மலைஏற்றம் வருபவர்கள் தீப்பந்தம், குடில்அமைத்து தங்குதல், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவருதலையும் நீதிமன்ற உத்தரவுப்படி தடை செய்துள்ளோம். மலைப்பகுதி தொடங்கும் இடத்தில் மட்டும் பெண்களுக்கு கழிப்பிட வசதி இருக்கிறது. அதன்பின் வனப்பகுதியில் இல்லை. பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய தீவிரமாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே அகஸ்தியர்கூட மலைக்குப் பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அங்குள்ள ஆதிவாசி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அகஸ்தியர்கூடம் சேத்திர கனிகர் அறக்கட்டளை தலைவர் மோகனா திரிவேதி கூறுகையில் “ கனி சமூகத்தினர் மட்டும் அகஸ்தியர் முனியை வழிபட்டு வருகிறோம். எங்கள் குலப்பெண்கள் யாரும் கோயிலுக்குள் வரமாட்டார்கள், கோயில் அமைந்திருக்கும் உச்சிமலைப்பகுதிக்கும் செல்லமாட்டார்கள். இதைப் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகிறோம். ” எனத் தெரிவித்தார்.