இந்தியா

பினாமி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 6,900 கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் 6,900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கைக்காக பினாமி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, பினாமி பரிமாற்றங்கள், பினாமி நபர்கள்,  மற்றும் பினாமி மூலம் பலன் பெறுவோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்த முடியும்.

இந்த சட்டத்தின்படி விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க முடியும். பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவீதம் அபராதமும் செலுத்த வேண்டும்.

இதேபோன்று பினாமி தொடர்பான விஷயங்களில் தவறான தகவல்களை அளிப்போர் பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். அவர்கள் பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீத அபராத தொகையும் செலுத்த வேண்டும்.

இந்த சட்டத்தின் கீழ் இதுவரை 6 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடங்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT